தண்ணீர் பிரச்சினை: அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தடை வருமா?

பெங்களூருவில் நிலவும் கடுமையான தண்ணீர் பிரச்சினை காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தடை விதிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறினார்.
தண்ணீர் பிரச்சினை: அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தடை வருமா?
Published on

பெங்களூரு :

அதிவேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு விளங்குகிறது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமாகவும் பெங்களூரு விளங்கி வருகிறது. இதனால் வேலைக்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வருகிறார்கள். வேலை வாய்ப்பு மற்றும் வியாபாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக பெங்களூருவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதனால் நகரில் குடியிருப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது. இடப்பற்றாக்குறை காரணமாக தற்போது பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது அதிகரித்து உள்ளது. இதனால் இந்த குடியிருப்புகளுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுப்பது பெங்களூரு மாநகராட்சிக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.

இந்த பிரச்சினை குறித்து கர்நாடக துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவற்றில் வீடுகளை விற்பனை செய்யும்போது, குடிநீர் பற்றி எதுவும் சொல்வது இல்லை. வீட்டில் குடியேறிய பிறகு அவர்கள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை பெற்று பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்கள் சரும நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

தண்ணீர் பிரச்சினை உள்ளதால், பெங்களூருவில் 5 ஆண்டுகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதை தடை செய்வது குறித்து அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக கட்டுமான தொழில் செய்பவர்களின் கூட்டத்தை கூட்டி அவர்களின் கருத்துகளையும் கேட்க உள்ளோம். அதன் பிறகு இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தற்போது உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து நேரில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு, 5-வது கட்ட காவிரி நீர் திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நீர் போதாது.

அதனால் தான் லிங்கனமக்கி அணையில் இருந்து பெங்களூருவுக்கு தண்ணீர் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். இதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திட்ட அறிக்கை வந்த பிறகு அதன் சாதக-பாதகங்கள் குறித்து ஆராயப்படும். இரும்பு மேம்பால திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டது. இதுபற்றி ஐகோர்ட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

அதற்கு பதிலாக உயர்த்தப்பட்ட சாலை அமைக்க முடிவு செய்துள்ளோம். இரும்பு மேம்பால திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்த்தப்பட்ட சாலை அமைக்க எதிர்ப்பு இல்லை.

இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com