

சென்னை:
சென்னையில் வரலாறு காணாத அளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் சோழவரம், புழல் ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. சென்னைவாசிகள் லாரி தண்ணீரை நம்பியே இருக்கிறார்கள்.
சென்னை நகருக்குள் தண்ணீர் லாரிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை போலீசார் நீக்கிவிட்டனர். பொதுமக்கள் தடங்கல் இல்லாமல் தண்ணீர் வாங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் புறநகர் பகுதிகளில் இருந்து தண்ணீரை எடுத்துவந்து விற்கிறார்கள்.
பள்ளிக்கரணை, ஈச்சங்காடு, மேடவாக்கம், மப்பேடு, மாம்பாக்கம், நெமிலிசேரி, நண்மங்கலம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதில் இருந்துதான் லாரிகளில் தண்ணீர் பிடித்து வந்தனர். இப்போது அந்த கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது.
இதனால் பொன்மார் பகுதியில் இருந்து இப்போது தண்ணீர் பிடித்து வருகிறார்கள். அங்கு கிணறு வைத்திருப்பவர்கள் ஒரு லாரி தண்ணீருக்கு ரூ.300 கட்டணம் வசூலித்தனர். இப்போது அதை ரூ.900 வரை உயர்த்திவிட்டனர். இதனால் லாரி தண்ணீர் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது.
12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மார்ச் மாதத்தில் ரூ.800-க்கு விற்றது. அதுவே கடந்த மாதம் ரூ.1500 முதல் 2000 வரை விற்கப்பட்டது. தற்போது ரூ.2 ஆயிரம் முதல் 2500 வரை விற்கிறார்கள்.
மீனம்பாக்கம் சுற்றளவில் ரூ.2000-க்கும் அதை தாண்டி பல்லாவரம், கிண்டி, அசோக் நகர், சைதாப்பேட்டை பகுதிகளுக்கு ரூ.2500-க்கும் விற்கிறார்கள்.
விலை எவ்வளவு கொடுத்தாலும் கேட்டவுடன் கிடைக்காது. தனியார் லாரிகளிலும் ‘அட்வான்ஸ் புக்கிங்’ என்ற அடிப்படையில் தான் தண்ணீர் சப்ளை செய்கிறார்கள்.
குடிநீர் வாரியத்தில் ஒரு லாரி தண்ணீர் ரூ.400 முதல் 600 வரைதான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கேட்டு பதிவு செய்தால் வரிசைப்படி தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
ஆனால் அவசரமாக தண்ணீர் தேவைப்படுபவர்கள் ஆயிரம் ரூபாயை வெட்டினால் போதும். கேட்டது தண்ணீர் வந்துவிடுகிறது. இதனால் குடிநீர் வாரிய தண்ணீரும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. #WaterShortage