மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,500 கன அடியாக குறைந்தது

காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த 2 நாட்களாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நீர்வரத்து 9 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை
Published on

மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் பெய்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதிகபட்சமாக 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

கடந்த மாதம் 39 அடியாக இருந்த நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து 117.30 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின அளவும் குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த 2 நாட்களாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நீர்வரத்து 9 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்தது.

மேட்டூர்அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல சரியத் தொடங்கியது. நேற்று காலை 117.30 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 117.22 அடியாக குறைந்துள்ளது.

நீர்வரத்து இதேபோல் குறைந்து வந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மேலும் சரிவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com