திட்டக்குடியில் தண்ணீரை குடித்த 2 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்: அதிகாரிகள் விசாரணை

திட்டக்குடியில் தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்த 2 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. தொட்டிக்குள் பாம்பை அடித்து கொன்று வீசியது யார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர்களை தாசில்தார்கள் பார்வையிட்டு விசாரித்தனர்.
திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர்களை தாசில்தார்கள் பார்வையிட்டு விசாரித்தனர்.
Published on

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 575 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி உள்ளது.

இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை மாணவர்கள் குடித்தனர். அவர்கள் குடித்த தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் கூறினர். இதைத்தொடர்ந்து பள்ளி ஊழியர்களின் உதவியுடன் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அதில் பாம்பு ஒன்று இறந்து கிடந்தது.

இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பள்ளியில் 7-வது படிக்கும் மாணவர்கள் வதிஷ்டபுரத்தை சேர்ந்த முருகன் மகன் சிவன் (வயது 12). நிதிநத்தத்தை சேர்ந்த நராயணன் மகன் செல்லதுரை (12) ஆகிய இருவரும் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தனர்.

அவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரையும் பள்ளி ஆசிரியர்கள் மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திட்டக்குடி தாசில்தார்கள் செந்தில்வேலன், ரவிச்சந்திரன், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் பாண்டிதுரை ஆகியோர் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். பின் அரசு மருத்துவமனைக்கு சென்று பள்ளி மாணவர்களிடம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர். மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கூறி சென்றனர்.

தொடர்ந்து தகவலின் பேரில் விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் பாண்டிதுரை திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டியை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திட்டக்குடி அரசு மருத்துவ மனைக்கு சென்று மாணவர்களிடம் நலம் விசாரித்தனர்.

மேலும் தண்ணீர் தொட்டியில் இறந்த பாம்பு கிடந்தது எப்படி? மர்ம மனிதர்கள் யாரேனும் பாம்பை அடித்து கொன்று குடிநீர் தொட்டியில் வீசி சென்றார்களா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com