

வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது அய்வேலி கிராமம். இங்கு 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டால் அதே பகுதியில் உள்ள ஆற்றில் அதிகாரிகள் உத்தரவுபடி புதிய போர் போடப்பட்டது.
அங்கிருந்து வரும் தண்ணீர் குடிநீர் தொட்டியில் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த குடிநீர் நிறம் மாறி கலங்கலாக வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு அய்வேலி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (வயது 35), பிரமிளா (45), கீர்த்தி (11), வெங்கடேசன் (65) உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு திடீரென்று வாந்தி-பேதி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, பொம்பூர் மற்றும் மயிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த வானூர் தாசில்தார் பிரபாகரன், சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அய்வேலி கிராமத்துக்கு வந்தனர். அங்கு விநியோகிக்கப்படும் குடிநீரை சோதனை செய்தனர். இது குறித்து அய்வேலி கிராம மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் புதிதாக போடப்பட்டு போர்வெல் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் கலங்கலாகவே வந்து கொண்டு இருக்கிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இதனால் நாங்கள் வேறு வழியில்லாமல் அந்த தண்ணீரை குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீரால்தான் எங்கள் பகுதி பொதுமக்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம்.
எனவே அதிகாரிகள் தூய்மையான குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் வானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.