

திருச்சி:
திருச்சி உறையூர் கீழபாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 43). கூலித் தொழிலாளி. தனசேகரனுக்கு சரிதா என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர்.
தன சேகரன் மனைவி குழந்தைகளுடன் ராம்ஜி நகர் அருகே உள்ள கல்லிக்குடியில் அவரதுபெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். தனசேகரன் தனது தாயார் சுசிலாவுடன் பாண்டமங்கலத்தில் வசித்து வந்தார்.
தனசேகரனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் அண்ணாமலை (23). பட்டதாரியான அண்னாமலை பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் மாட்டு வண்டியில் காவிரி ஆற்றுக்குவாரியில் மணல் அள்ளும் வேலை பார்த்து வந்தார்.
தற்போது காவிரி ஆற்றில் மணல் குவாரி நிறுத்தப்பட்டதால் வீட்டில் வேலை இல்லாமல் இருந்து வருகிறார். இந்தநிலையில் அண்ணாமலை வீட்டிற்கும் பக்கத்து வீடான தனசேகரன் வீட்டிற்கும் பக்கத்து தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இதில் இரு குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று மாலை தனசேகரனின் தாய் சுசிலாவும், அண்ணாமலையின் தாயும் தண்ணீர் பிடிக்கும் போது வாக்குவாதம் செய்தனர். இது குறித்து அண்ணாமலையிடம் அவரது தாய் புகார் செய்தார். இதனால் அண்ணாமலை தனசேகரின் தாய் சுசிலாவை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தனசேகரன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை வீட்டிற்கு சென்று தனது தாயை திட்டியதற்கு சத்தம் போட்டார். அப்போது தனசேகரனுக்கும், அண்ணா மலைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென வீட்டிற்குள் சென்ற அண்ணாமலை கத்தியை எடுத்து வந்து தனசேகரனின் மார்பில் குத்தினார்.
இதில் இதயம் முழுவதுமாக கிழிக்கப்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் தனசேகரன் சுருண்டு விழுந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அண்ணாமலை தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். உறவினர் வீட்டில் அவர் பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அங்கு போலீசார் விரைந்துள்ளனர்.