

பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்துள்ள பருவதன ஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அண்ணாநகர். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வர வில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யகோரி இந்த பகுதி மக்கள் பலமுறை பருதனஹள்ளி ஊராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரைக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை பென்னாகரம்-தாசம்பட்டி சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த டேங்க் ஆபரேட்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் இன்று மாலை முதல் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதனால் பேச்சு வார்த்தைக்கு உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.