வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: துபாய் நிறுவன இயக்குனரை கைது செய்தது அமலாக்கத்துறை

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக துபாயைச் சேர்ந்த நிறுவனத்தின் இயக்குனரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: துபாய் நிறுவன இயக்குனரை கைது செய்தது அமலாக்கத்துறை
Published on

புதுடெல்லி:

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு இங்கிலாந்தில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.3 ஆயிரத்து 767 கோடி. இந்த ஒப்பந்தத்தை முடிவு செய்யும் பொழுது, விமானப்படை தலைமை தளபதியாக இருந்த எஸ்.பி. தியாகி உடன் இருந்துள்ளார்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி தியாகி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், துபாயைச் சேர்ந்த நிறுவனத்தின் பெண் இயக்குனரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளார். அந்த நிறுவனம் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஷிவானி சக்சேனா என்ற அந்த அதிகாரி, யு.எச்.ஒய். மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் செயல் இயக்குனர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (பி.எம்.எல்.ஏ. கோர்ட்) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 4 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் இரண்டாவது நபர் ஷிவானி ஆவார். இதற்கு முன், 2014ம் ஆண்டு வழக்கறிஞர் கவுதம் கெய்தான் கைது செய்யப்பட்டார். எஸ்.பி.தியாகி உள்ளிட்ட 3 பேரை சி.பி.ஐ. கடந்த ஆண்டு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com