

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார், அஜ்மீர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள உலுபேரியா ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள நோபரா சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அஜ்மீர் தொகுதியில் பா.ஜ.க.வின் பூபேந்தர் யாதவ் குந்தர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். உலுபேரியா தொகுதியில் வாக்குச்சாவடி 231-ல் வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் அங்கு தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.
அஜ்மீர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகு ஷர்மா, பா.ஜ.க. வேட்பாளர் ராம்ஸ்வரூப் லாம்பா உள்பட மொத்தம் 23 பேர் போட்டியிடுகின்றனர். அல்வார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கரன் சிங் யாதவ், பா.ஜ.க. வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் யாதவ் உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
நாட்டிலேயே முதன்முறையாக வேட்பாளர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாக்கு இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் முதல் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #tamilnews