

வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, 1-1-2018-ந் தேதி அடிப்படையாகக் கொண்டு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணி தொடங்கியது.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன.
இதற்கான முதற்கட்ட சிறப்பு முகாம் கடந்த 8-ந்தேதி நடந்தது. இரண்டாம் கட்ட முகாம் நாளை நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள 1,627 வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
புதிய வாக்காளர்களாக சேர படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, பிழைகளை திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் இடம் பெயர்ந்த வாக்காளர்களின் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8ஏ அளிக்க வேண்டும்.
படிவங்களை முழுமையாக நிரப்பி பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.