துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை- இந்திய வீரர் விவான் கபூர் இரு வெண்கலப்பதக்கம் வென்றார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் விவான் கபூர் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். #VivaanKapoor #ISSFWorldCup
துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை- இந்திய வீரர் விவான் கபூர் இரு வெண்கலப்பதக்கம் வென்றார்
Published on

சிட்னி:

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 19-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று ஆண்களுக்கான ஷாட்கன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் விவான் கபூர்  (16) வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் இத்தாலியின் மேட்டியோ மரொன்கியு தங்கப்பதக்கமும், சீனாவின் இலியு ஒயுயாங் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இது விவான் கபூர் வெல்லும் இரண்டாவது வெண்கலப்பதக்கம் ஆகும்.

முன்னதாக இதே பிரிவில் நடைபெற்ற ஆண்கள் குழு போட்டியில் இந்திய வீரர்களான விவான் கபூர், லக்‌ஷய், அலி அமான் எலாகி ஆகியோர் இணைந்து வெண்கலப்பதக்கம் வென்றனர். இப்போட்டியின் தங்கப்பதக்கத்தை சீனாவும், வெள்ளிப்பதக்கத்தை ஆஸ்திரேலியாவும் தட்டிச் சென்றன.

நேற்று நடைபெற்ற ஜூனியர் பெண்களுக்காக 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட  தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். முன்னதாக  ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோர் உடன் இணைந்து, இளவேனில் வளரிவான் குழு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுடா வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்திய அணி 2 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா 5 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. #VivaanKapoor #ISSFWorldCup

X

Maalai Malar
www.maalaimalar.com