விருதுநகரில் கல்குவாரி தொழிலாளி அடித்துக்கொலை- காவலாளி கைது

விருதுநகரில் கல்குவாரி தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை
கொலை
Published on

விருதுநகர்:

விருதுநகர் கட்டநார்பட்டியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த குவாரியில் காவலாளியாக விருதுநகர் சென்னக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி (57) பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை குவாரியில் வேலை பார்க்கும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரசாலா விலக்கு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (வயது24), ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையூரைச் சேர்ந்த ஜோதிமாணிக்கம் (25), சேது ஆகியோர் அங்கு அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது கருப்பசாமியை அவதூறாக விஷ்ணு பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு ஜோதிமாணிக்கம் மற்றும் சேது வெளியே சென்று விட்டனர்.

இரவில் ஜோதி மாணிக்கம் கல்குவாரிக்கு திரும்பியபோது விஷ்ணு காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார். அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் விஷ்ணு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசில் ஜோதி மாணிக்கம் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விஷ்ணு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் காவலாளி கருப்பசாமிதான் கொலையாளி என தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், விஷ்ணு வயது வித்தியாசம் பார்க்காமல் தரக்குறைவாக பேசியது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே சம்மட்டியால் அவரை அடித்து காயப்படுத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார் என கருப்பசாமி தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com