

விருதுநகர்:
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தினை கலெக்டர் சிவஞானம் திறந்து வைத்தார். இதில் அவர் பேசியதாவது:-
தமிழக அரசின் உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற் கொள்ளும் வகையில் டெங்கு தடுப்பு கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் ஒரு கட்டுபாட்டு மைய அலுவலர் பணியில் இருப்பார். மேலும், மாவட்டத்தில் களப்பணி செய்வதற்கென 76 அலுவலர்கள் தயார் நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டு மையத்திற்கு பொதுமக்கள் தங்கள் பகுதியில் எவருக்கேனும் டெங்கு காய்ச்சல் கண்டாலோ, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தாலோ, குப்பைகள் நிறைந்த அசுத்தமானஇடமாக இருந்தாலோ உடனே தெரிவிக்கலாம்.
நிலைய கட்டுப்பாட்டு அலுவலர் தெளிவான விவரங்களை பொதுமக்களிடமிருந்து பெற்று பின்னர் மாவட்டத்தில் களப்பணி செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட பகுதி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்கள் 04562- 252909 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட ஊராட்சி செயலர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் பூங்குழலி உட்பட பலர் உடனிருந்தனர்.