விழுப்புரம் அருகே லாரி டிரைவர் கழுத்தை அறுத்து படுகொலை

விழுப்புரம் அருகே லாரி டிரைவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை
கொலை
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் கோலியனூர் கூட்டுரோடு அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள சாலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இன்று காலை பிணமாக கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது அந்த வாலிபரின் கழுத்து பாதி அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலின் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடந்தது. பின்னர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர் விழுப்புரம் அருகே உள்ள மாதுரிமங்கலம் மேல்பாதி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 30) என்பதும், அவர் லாரி டிரைவராக வேலைபார்த்து வந்ததும் தெரிய வந்தது.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தமிழ்ச்செல்வன் அந்த பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு மது குடிக்க சென்றது தெரியவந்தது. அப்போது தமிழ்ச்செல்வனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்செல்வன் வீட்டிற்கு வந்துவிட்டார். இன்று காலை தமிழ்செல்வன் மோட்டார் சைக்கிளில் சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் தமிழ்செல்வனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

தமிழ்செல்வனுக்கும், அவரது நண்பர்களுக்கும் மதுகுடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது மர்ம மனிதர்கள் யாரேனும் தமிழ்ச்செல்வனை வெட்டி கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். லாரி டிரைவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com