

தென்தாமரைகுளம்:
குமரி மாவட்டம் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு அந்த பகுதி மீனவர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இனயத்தில் துறைமுகம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
அதற்கு பதில் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்துக்கும், கீழமணக்குடிக்கும் இடையே ரூ.19 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் வர்த்தக துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு கன்னியாகுமரி, கோவளம், கீழமணக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு துறைமுக ஆய்வுக்காகச் சென்ற மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானை சிறைபிடித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் போராட்டம் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் துறைமுகத்துக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினர் கூட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை தென்தாமரைகுளம் அருகே உள்ள இலந்தையடிவிளையில் துறைமுகத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 80 கிராம மக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பெண்கள், சிறுவர்கள் என பங்கேற்று தங்கள் பகுதிக்கு துறைமுகம் தேவை என்று கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் குமரியில் துறைமுகம் அமைந்தால் தொழில் வாய்ப்புகள் பெருகும். வருங்கால சந்ததிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். குமரி மாவட்டத்தில் பெரிய தொழில் நிறுவனங்கள் இல்லை. எனவே தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இந்த திட்டததை கொண்டு வர வேண்டும் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் துறைமுக ஆதரவு இயக்க தலைவர் வேல்பாண்டியன் பேசுகையில் வர்த்தக துறைமுகம் வந்தால் குமரி மாவட்டம் செழிப்படையும். எனவே இதற்காக ஒரு இயக்கம் தொடங்கி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. துறைமுகம் வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார். முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் பேசுகையில் குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைப்பதற்கு மாவட்டத்தில் அதிகமான மக்களின் ஆதரவு உள்ளது. அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி துறைமுகம் அமைந்தே தீரும். துறைமுகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் அய்யா வழி பாடகர் சிவச்சந்திரன், பேராசிரியர் டி.சி. மகேஷ், தென்தாமரைகுளம் கூட்டுறவு வங்கி தலைவர் வளன் அரசு, அ.தி.மு.க. பிரமுகர் கவிஞர் சதாசிவம், பாரதீய ஜனதா மாவட்ட துணை தலைவர் முத்துராமன், நிர்வாகி தர்மலிங்க உடையார், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews