

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும். அப்போது தான் மக்களுக்கு உண்மை நிலை தெரிய வரும். நியாய விலை கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா கலந்து கொண்டு பேசியதாவது:-
ரேஷன் கடையில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணியினர் மாநாடு போல் திரண்டுள்ளனர்.
தே.மு.தி.க. மட்டும்தான் தொண்டர்களை மதிக்கும் கட்சி. 12 வருடங்களாக விஜயகாந்த் கட்சியை நல்ல முறையில் வளர்த்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக சீர் கேடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மழை பெய்ததால் சாலை பழுதடைந்துள்ளது. சென்னை மாநகரமே வெள்ள காடாகி மக்கள் அவதிப்பட்டனர்.
சர்க்கரை விலையை கிலோ ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மாநில சாலைகளாக மாற்றி மதுபான கடைகளை திறந்துள்ளனர்.
மக்களின் வரி பணத்தை எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவிற்கு செலவழித்து வீணாக்கி வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்து துறையை ரூ.300 கோடிக்கு அடமானம் வைத்து விட்டது.
ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை முதல்-அமைச்சரின் அனுமதியின் பெயரிலேயே தெரிந்தே நடத்தப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நடைபெறும் பொம்மையாட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள். வெகுவிரைவில் இந்த ஆட்சி கவிழ்வது உறுதியாகிவிட்டது. விரைவில் கவர்னர் ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கு.நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் கே.பாலசுப் பிரமணியன், விசாகன் ராஜா, வி.சி.ஆனந்தன், வேளச்சேரி பி.பிரபாகரன், ப.மதிவாணன், அனகை முருகேசன், தினகர் மற்றும் த.பாண்டியன், ஆயிரம் விளக்கு கோவிந்தன், சைதை அகமது, காளிச்சரண், அண்ணல் ஜே, முன்னாள் கவுன்சிலர் பிரபாகரன், புதுநகர் மகேஷ் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.