வேட்டியில் இருந்து ‘பேண்ட்’டுக்கு மாறிய விஜயகாந்த்

கடந்த சில நாட்களாக வேட்டிக்கு விடை கொடுத்துள்ள விஜயகாந்த் வெளியிடங்களுக்கு செல்லும் போது பேண்ட் அணிந்து செல்கிறார்.
வேட்டியில் இருந்து ‘பேண்ட்’டுக்கு மாறிய விஜயகாந்த்
Published on

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் அரசியல் பயணம் ஜெட் வேகத்தில் தொடங்கியது.

கட்சி தொடங்கப்பட்டதும் முதல் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் 2011-ம் ஆண்டு விஜயகாந்த் விஸ்வரூப வெற்றியை பெற்றார். தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்து யாரும் எதிர்பாராத வகையில் வெற்றியை ருசித்தார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். இதனால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. ஆனால் அ.தி.மு.க.வோடு விஜயகாந்தால் நல்லுறவுடன் செயல்பட முடியவில்லை.

ஜெயலலிதாவோடு மோதல் போக்கை கடைபிடித்தார். இதனால் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் விஜயகாந்துக்கு எதிராக அணி திரண்டனர். இது தே.மு.தி.க.வுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நலக் கூட்டணி தே.மு.தி.க.வுடன் இணைந்து போட்டியிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. முதல்-அமைச்சர் வேட்பாளராக களம் இறங்கிய விஜயகாந்தும் தோல்வியை தழுவினார். இதனால் விரக்தியடைந்த அவர் மக்கள் நலக் கூட்டணிக்கு முழுக்கு போட்டார்.

இனி வரும் காலங்களில் கூட்டணி கிடையாது. தே.மு.தி.க. தனித்தே போட்டியிடும் என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். உடல் நலக்குறைவு மற்றும் சில காரணங்களில் அரசியல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இப்போது அரசியல் களத்தில் திடீர் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கியுள்ளார்.

சினிமாவில் பேண்ட்-டிசர்ட் என கதாநாயகனாக வலம் வந்த விஜயகாந்த் அரசியல்வாதியான பின்னர் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டார். வெள்ளை வேட்டி சட்டை அணிந்தே வெளியிடங்களுக்கு சென்று வந்தார்.

கடந்த சில நாட்களாக விஜயகாந்த் வேட்டிக்கு விடை கொடுத்துள்ளார். வெளியிடங்களுக்கு செல்லும் போது பேண்ட் அணிந்து செல்கிறார்.

இதுபற்றி ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்த விஜயகாந்த், இதுவே எனக்கு வசதியாக உள்ளது என்றும் கூறி இருந்தார்.

டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊர் ஊராக சென்று அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

கடந்த வாரம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கிய விஜயகாந்த் பின்னர் சென்னையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை ஆகியவற்றுக்கும் சென்றார். இன்று செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.

ஆஸ்பத்திரிகளுக்கு சென்று நோயாளிகளை பார்த்து விட்டு வெளியில் வந்து பத்திரிகையாளர்களை சந்திப்பதையும் விஜயகாந்த் வழக்கமாக வைத்துள்ளார். டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு தவறி விட்டது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் விஜயகாந்த் இன்று அளித்த பேட்டியில் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு நிவாரணம் கேட்டிருப்பது கொள்ளையடிப்பதற்குதான் என்றும் காட்டமாக சாடி உள்ளார்.

இனி எப்போதும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிடும் என்று அறிவித்துள்ள விஜயகாந்த் விட்ட இடத்தை பிடிப்பதற்காகவே வேகம் காட்ட தொடங்கி இருக்கிறார் என்கின்றனர் கட்சியினர்.

விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்தே விஜயகாந்த் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியை பெறவேண்டும் என்பதே விஜயகாந்தின் இப்போதைய இலக்காக இருப்பதாக கூறப்படுகிறது.

விஜயகாந்தின் இந்த திடீர் சுறுசுறுப்பு அவரது கட்சியினரை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com