அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்-விஜயதரணி வலியுறுத்தல்

குமரியில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
விஜயதரணி எம்எல்ஏ
விஜயதரணி எம்எல்ஏ
Published on

நாகர்கோவில்:

விஜயதரணி எம்.எல்.ஏ. தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரியில் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமாக 15 லட்சம் ரப்பர் மரங்கள் உள்ளன. இங்கு 949 நிரந்தர பணியாளர்கள், 517 தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் 1500 பேர் என் 3 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.406 அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 17-ந்தேதி முதல் தினக்கூலியை ரூ.100 உயர்த்தி தரக்கோரி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

23 முறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடை பெற்றும் முடிவு எட்டப் படவில்லை. அரசு இடைக்காலமாக தினக்கூலியில் ரூ.23 உயர்த்தி அறிவித்து அரசாணை வெளியிட்டது. மீண்டும் வேலை நிறுத்தம் தொடர்ந்ததால் வனத்துறை அமைச்சர் ரூ-.7 தினசரி கூடுதலாக அறிவித்தார். கடந்த மார்ச் 19 மற்றும் 20-ந்தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே எனது கோரிக்கையை ஏற்று தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்ட வாபஸ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இந்நிலையில் மார்ச் 22 மற்றும் 25-ந்தேதி முதல் கொரோனா காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரப்பர் பால் வெட்டும் பணிகள் நடைபெறவில்லை. 79 நாட்களாக பணிக்கு செல்லாமல் உள்ளதால் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வறுமையில் உள்ளனர். அவர்களது குடும்பம் பட்டினியால் வாடுகின்றன. கொரோனா நிவாரணமும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

எனவே தமிழக அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ரூ.436 தினக்கூலியாக அறிவித்து தொழிலாளர்களை பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும். பொது முடக்கத்தில் இருந்து விவசாய பணிக்கு விலக்கு அளித்து அரசு ஆணையிட்டு  உள்ளது. எனவே இவர்களை அரசு ரப்பர் கழகம் மீண்டும் பணிக்கு அழைத்து, ரப்பர் மரங்களை பாதுகாக்கவும், ஒட்டுக்கறை மற்றும் தினசரி பால் வடிக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com