இங்கிலாந்து அரசு உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு

இங்கிலாந்து அரசின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார். இதனால் அவரை நாடு கடத்துவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. #VijayMallya
இங்கிலாந்து அரசு உத்தரவை எதிர்த்து  விஜய் மல்லையா மேல்முறையீடு
Published on

லண்டன்:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 63), இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன.

அவரை நாடு கடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, அவரை நாடு கடத்த கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி உத்தரவிட்டது.

மேலும், அந்த உத்தரவு, முறைப்படி இங்கிலாந்து அரசுக்கு (உள்துறை மந்திரி சஜித் ஜாவித்துக்கு) அனுப்பி வைக்கப்பட்டது.

அதை இங்கிலாந்து உள்துறை மந்திரி சஜித் ஜாவித் பரிசீலித்து, விஜய் மல்லையாவை நாடு கடத்தும் கோர்ட்டு உத்தரவுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். இதை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உறுதி செய்தது.

இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 4-ந் தேதி முதல் 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா அறிவித்தார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மேல்முறையீடு செய்யும் எனது விருப்பத்தை தெரிவித்தேன். உள்துறை மந்திரியின் முடிவுக்கு முன் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. இப்போது மேல்முறை செய்யும் நடவடிக்கையை எடுப்பேன்” என கூறி உள்ளார்.

எனவே அவர் இங்கிலாந்து ஐகோர்ட்டில் விரைவில் மேல்முறையீடு செய்கிறார்.

இதனால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

 #VijayMallya

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com