துணை ஜனாதிபதி தேர்தல்: தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் போட்டி?

துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பா.ஜ.க. சார்பில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி ஆனந்திபென் படேல், தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் முதன்மையாக உள்ளன.
துணை ஜனாதிபதி தேர்தல்: தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் போட்டி?
Published on

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந்தேதியுடன் முடிகிறது.

இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வருகிறது. வருகிற 18-ந்தேதி மனுதாக்கலுக்கு கடைசி தினமாகும்.

காங்கிரஸ் தலைமையிலான 18 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளன. அவர் விரைவில் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆளும் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என்று கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பையாஜி ஜோஷி, கிருஷ்ண கோபால் இருவரையும் சந்தித்து இது தொடர்பாக பேசினார்.

இதையடுத்து பிரதமர் மோடியுடன் இன்று (வெள்ளிக்கிழமை) அமித்ஷா ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு உறுப்பினர்களுடனும் அமித்ஷா பேசவுள்ளார்.

இந்த ஆலோசனைகள் முழுமையாக முடிந்த பிறகு துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயரை அமித்ஷா வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆலோசனையில் பலரது பெயர்களை அமித்ஷா பரிசீலனை செய்துள்ளார். குஜராத் முன்னாள் முதல்-மந்திரி ஆனந்திபென் படேல், மணிப்பூர் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா, தமிழக கவர்னரும் (பொறுப்பு) மராட்டிய கவர்னருமான வித்யாசாகர்ராவ் ஆகியோரது பெயர்கள் இந்த பரிசீலனையில் முதன்மையாக உள்ளன.

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான ஹுக்கும் தேவ் நாராயண் யாதவ், கேரளாவைச் சேர்ந்த ஓ.ராஜகோபால் ஆகியோரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டது. இவர்கள் தவிர எதிர்பாராதபடி ஆச்சரியம் அளிக்கும் வகையில் புதுமுகங்களும் வேட்பாளர் ஆக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் கவர்னர்கள் நஜ்மா ஹெப்துல்லா, ராம்நாயக், ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு தங்களை துணை ஜனாதிபதி ஆக்கும் படி பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com