

துணை ஜனாதிபதி முகம்மது ஹமீத் அன்சாரி 2007-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற 10-ந்தேதி (வியாழக் கிழமை) நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஆகஸ்டு 5-ந்தேதி (நாளை சனிக்கிழமை) தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக பாராளுமன்ற மேல்சபை செயலாளர் சம்லுர் கே.ஷெரீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்பு துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. ஆளும் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரியாக இருந்த வெங்கய்யா நாயுடு களம் இறக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் கவர்னரும் மகாத்மா காந்தியின் பேரணுமான கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதியை பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள். மக்களவையில் 543 எம்.பி.க்களும் 2 நியமன எம்.பி.க்களும் உள்ளனர். மாநிலங்களவையில் 233 எம்.பி.க்களும் 12 நியமன எம்.பி.க்களும் உள்ளனர். நியமன எம்.பி.க்களுக்கும் ஓட்டுரிமை உண்டு.
எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் உள்ள 790 எம்.பி.க்களும் வாக்களிப்பார்கள். நாளை (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறும். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தனி அறையில் இதற்காக ஓட்டுச்சாவடி ஏற்படுத்தப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.க்கள் அனைவரும் ரகசிய முறையில் ஓட்டுச் சீட்டை பயன்படுத்தி வாக்களிப்பார்கள். எம்.பி.க்கள் ஓட்டு போடுவதற்காக சிறப்பு பேனா பயன்படுத்தப்படும். நாளை மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
அதன்பிறகு உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். ஓரிரு மணி நேரத்துக்குள் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு விடும். எனவே புதிய துணை ஜனாதிபதி யார் என்பது நாளை மாலையே தெரிந்து விடும்.
பாராளுமன்ற இரு சபைகளில் உள்ள மொத்த எம்.பி.க்களான 790 பேரில் சுமார் 550 பேர் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் வெங்கய்யா நாயுடுவுக்கு வாக்களிப்பார்கள். எனவே அவர் நாளை துணை ஜனாதிபதியாக தேர்வு பெறுவது உறுதியாகி விட்டது.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. எம்.பி.க்கள் சிலர் அளித்த ஓட்டு செல்லாத ஓட்டுகளாக இருந்தது. அது பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் அப்படி செல்லாத ஓட்டுகள் விழுந்து விடக்கூடாது என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.