

கோவை:
உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதியை 5 நாள் காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்பு போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று 3-வது நாளாக கணபதியிடம் விசாரணை நடந்தது. கணபதி கைதான போது அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். ரூ.29 லட்சத்துக்கு அவர் வாங்கிய 4 காசோலைகளை எங்கோ மறைத்து வைத்து விட்டார். போலீசார் அவரது வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து போலீசார் துருவி, துருவி விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். ஒரு முறை காசோலைகளை வாங்கவே இல்லை என்ற அவர், சிறிது நேரம் கழித்து காசோலைகளை வாங்கி எங்கே வைத்தேன் என ஞாபகம் இல்லை என கூறி உள்ளார்.
இதேபோல பேராசிரியர் பணிநியமனங்கள் தொடர்பாக போலீசார் கைப்பற்றி இருந்த ஆவணங்களை காட்டி விசாரித்தனர். பெரும் பாலான கேள்விகளுக்கு அவர் மவுனம் சாதித்தார். உதவி பேராசிரியர் சுரேசிடம் பேரம் பேசிய ஆடியோ குறித்து கேட்ட போது இவ்வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டுள்ளேன் என கூறினார்.
தொடர்ந்து போலீசார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு எனக்கு எதுவும் தெரியாது என்றார். இடைத் தரகர்களாக செயல்பட்ட சிலரது பெயரை மட்டும் அவர் கூறியதாக தெரிகிறது. இவ்வழக்கில் அவர்களின் தொடர்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.
பல்கலைகழகத்தின் பல்வேறு துறைகளிலும் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னாள் துணைவேந்தர்கள் பின்பற்றிய பல்கலைகழக விதிமுறைகளையே நானும் பின்பற்றினேன் என கூறி உள்ளார்.
பேராசிரியர் பணி நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கியதன் பின்னணியில் உயர் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவரது சொத்து விவரங்கள் குறித்தும் விசாரிக்கின்றனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-
துணைவேந்தரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக காசோலைகள் தொடர்பாக அவரிடம் விசாரித்து வருகிறோம். பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. இன்னும் 2 நாட்கள் விசாரணை இருக்கிறது. அதன் பின்னர் அவருடன் உடந்தையாக இருந்தவர்களை அழைத்து விசாரணை நடத்த உள்ளோம்.
கணபதியின் மனைவி சொர்ணலதா, தொலைதூர கல்வி மைய இயக்குனர் மதிவாணன் ஆகியோரிடம் தற்போது விசாரணை நடத்தும் திட்டம் இல்லை.தேவைப்படும் பட்சத்தில் இருவருக்கும் சம்மன் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.