

கோவை:
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். எனவே துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க முடியாது. ஒருவேளை துணைவேந்தர் இல்லையென்றால் அவருக்கு பதில் நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும்.
அதுகுறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 107 தனியார் உறுப்பு கல்லூரிகள் உள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 18 சிண்டிகேட் உறுப்பினர்கள் உள்ளனர். அது தான் அதிக அதிகாரம் உள்ள அமைப்பு. அதில் 13 பேர் நியமன உறுப்பினர்கள். 5 பேர் ஓட்டுபோட்டு தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் ஓரிரு நாளில் கூட்டப்பட உள்ளது. அந்த கூட்டத்தில், ‘கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைதாகி உள்ளதால் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்ய நிர்வாக குழு கூட்டம் அமைக்க வேண்டி இருப்பதால் அதற்கான அனுமதியை அளிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றி தமிழக உயர் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின்னர் உயர் கல்வித்துறை அனுமதி அளித்த பின்னர் சிண்டிகேட் கூட்டம் கூட்டப்பட்டு அதில் நிர்வாக குழு அமைக்கப்படும். அந்த குழுவில் 3 பேர் நியமிக்கப்படுவார்கள். அதில் 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்களிலிருந்தும், ஒருவர் நியமன சிண்டிகேட் உறுப்பினர்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த குழுவிற்கு தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். அந்த குழு அமைக்கப்பட்ட பின்னர் தான் பல் கலைக்கழக நிர்வாகம் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews