ஜெயலலிதா சிகிச்சை வீடியோ: அரசியல் தலைவர்கள் எழுப்பும் சந்தேகங்கள்

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ: அரசியல் தலைவர்கள் எழுப்பும் சந்தேகங்கள்
Published on

சென்னை:

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று வெளியிட்டார். இதுபோன்று பல்வேறு வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஜெயலலிதா மறைந்து இவ்வளவு நாட்கள் கழித்து, அதுவும் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஒருநாள் முன்பாக வீடியோ வெளியிட்டிருப்பதால், இதுபற்றி பல்வேறுவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியவே வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது என  தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் தரப்பைச் சேர்ந்த கே.சி.பழனிச்சாமியிடம் இதுபற்றி கேட்டபோது, போயஸ் கார்டனில் நடந்தது என்ன? ஜெயலலிதா ஏன் காப்பாற்றப்படவில்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு என்றார்.

தற்போது வெளியிடப்பட்ட வீடியோ ஆயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளது என்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, தற்போது வெளியிடுவதற்கான காரணம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

மோசமான உடல்நிலையில் அனுமதிக்கப்பட்டதாக, மருத்துவமனை தெரிவித்த நிலையில் தற்போது வெளியான வீடியோவை, நம்ப முடியவில்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். இந்த  வீடியோவின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ, அப்பல்லோ மருத்துவமனையில் தான் எடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.

இதுபற்றி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, “உண்மையிலேயே சட்டத்தை மதிப்பவர்களாக இருந்தால் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை விசாரணை கமிஷனிடம் கொடுத்திருக்க வேண்டும். ஏன் கொடுக்கவில்லை? ஓராண்டாக கொடுக்காமல் இப்போது வீடியோவை  வெளியிடவேண்டிய நோக்கம் என்ன? நாளை தேர்தலை சந்திக்க வேண்டிய சமயத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?  மனசாட்சிப்படி வீடியோவை வெளியிட்டதாக கூறும் வெற்றிவேலுக்கு இத்தனை நாள் மனசாட்சி இல்லையா?” என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com