

தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு புரதச்சத்து அதிகப்படுத்தும் உணவு தாவரங்களை மண்ணில்லாமல் உற்பத்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 50 விவசாயிகளுக்கு கருவிகள் மூலம் கால்நடைகளுக்கு தேவையான உணவு தாவரங்களை உற்பத்தி செய்ய தமிழக அரசு மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது. கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடியில் மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் தோட்டத்தில் கால்நடைகளுக்கு தேவையான தாவரங்களை மண் இல்லாமல் உற்பத்தி செய்யும் கருவிகள் அமைக்கப்பட்டு கால்நடை தீவனம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு உதவியாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கீழக்கரை கால்நடை உதவி மருத்துவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கூறும்போது, நல்ல குடிநீர் உள்ள நிலங்கள், இயற்கை நிழல் உள்ள பகுதியில் மட்டுமே இதுபோன்ற தாவரங்கள் வளரும். ஒரு வாரத்தில் ஒரு கிலோ மக்காச்சோளத்திற்கு 7 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். கால்நடைகள் பச்சை தாவரங்கள் உண்ணுவதால் பால் உற்பத்தி அதிகரிப்பதோடு கண் நோய் ஏற்படுவதில் இருந்து காப்பாற்றப்படும்.
மேலும் பற்றாக்குறை இல்லாமல் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள இத்திட்டம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது என்று தெரிவித்தனர்.