வேப்பூர் அருகே ஜவுளி கடையில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஜவுளி கடையில் ரூ.3½ மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கொள்ளை நடந்த கடையை படத்தில் காணலாம்.
கொள்ளை நடந்த கடையை படத்தில் காணலாம்.
Published on

வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள வரத்தனூர் பகுதியை சேர்ந்தவர் தெய்வீகன் (வயது 45).

இவர் வேப்பூர் கூட்ரோட்டில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று வேப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை என்பதால் அந்த பகுதியில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. அதேபோல் இவரது கடையிலும் வியாபாரம் நன்றாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு கடையில் வசூலான பணம் மற்றும் அவருக்கு சொந்தமான 10 பவுன் நகை ஆகியவற்றை கல்லாப் பெட்டியில் வைத்து பூட்டினார். அதன் பின்னர் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 10 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை வழக்கம்போல் கடைக்கு வந்த தெய்வீகன் கடையை திறந்து பார்த்தார். அப்போது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற பணம் மற்றும் நகையின் மதிப்பு ரூ.3½ லட்சம் ஆகும்.

இது குறித்து வேப்பூர் போலீசில் தெய்வீகன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com