வேப்பம்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை

வேப்பம்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பம்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை
Published on

செவ்வாப்பேட்டை:

வேப்பம்பட்டு அடுத்த பெருமாள்பட்டு, நேரு தெருவைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது22). நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

அப்போது இருளில் மறைந்து இருந்த மர்ம கும்பல் திடீரென விக்னேசை சுற்றி வளைத்து சரமாரியா வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனே கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

விக்னேஷ் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். செவ்வாப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் விக்னேஷ் இருந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதன் பின்னரே அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த வாலிபால் போட்டியின் போது விக்னேசுக்கும் சிலருக்கும் இடையே தகராறு உருவாகி இருக்கிறது.

இந்த மோதலில் கொலை நடந்ததா? கடைசியாக விக்னேசின் செல்போனுக்கு பேசியது யார்? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com