தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிபர் அறிவிப்பு - எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்கிறது

வெனிசூலாவில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.
தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிபர் அறிவிப்பு - எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்கிறது
Published on

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் புதிய அரசியல் சட்டம் இயற்றும் அதிகாரத்தை கொண்டுள்ள அரசியல் நிர்ணய சபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதன் மூலம் நாட்டில் நிலவி வரும் அரசியல் நிலையற்ற தன்மைக்கு தீர்வு காணப்பட்டு, அமைதியை ஏற்படுத்த முடியும் என அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்து இருந்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. மேலும் தேர்தலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. சில இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வேட்பாளர் ஒருவர் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு மத்தியிலும் பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அந்தவகையில் 41.5 சதவீத வாக்குகள் பதிவானதாக கணக்கிடப்பட்டது.

இந்த தேர்தல் முடிவடைந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன. இதில் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருப்பதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ நேற்று அறிவித்தார். கடந்த 18 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய புரட்சி என தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசினார். ஆனால் இது ஒரு மோசடி நடவடிக்கை என்று வர்ணித்துள்ள எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com