வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை - டிரம்ப்பின் மிரட்டலுக்கு மந்திரி பதில்

வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்துக்கு வெனிசுலா மந்திரி பதில் அளித்துள்ளார்.
வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை - டிரம்ப்பின் மிரட்டலுக்கு மந்திரி பதில்
Published on

கரக்காஸ்:

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக அதிபர் நிக்கோலஸ் மசுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இதனிடையே, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. மேலும் தேர்தலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. சில இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு வேட்பாளர் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு மத்தியிலும் பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த தேர்தல் முடிவடைந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன.

இதில் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருப்பதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்தார். கடந்த 18 ஆண்டுகால வெனிசுலாவின் அரசியல் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய புரட்சி என தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசினார்.

இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரோ ஒரு சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜான்-உன், சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஆகியோருக்கு அடுத்தபடியாக மடுரோவுக்கு எதிராக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிலையில், வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக அமரிக்கா தயார்நிலையில் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘வெனிசுலா நாட்டு மக்கள் மிகவும் சித்ரவதைக்குள்ளாகி செத்து மடிகின்றனர். வெனிசுலா விவகாரத்தில் ராணுவ நடவடிக்கை உள்பட பல விருப்ப தேர்வுகள் பரிசீலனையில் உள்ளன’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவத்தை ஏவி அடக்குவேன் என்னும் பொருள்பட பேசியுள்ள டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெனிசுலா அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப்பின் மிரட்டல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெனிசுலா நாட்டு தகவல் தொடர்புத்துறை மந்திரி எர்னஸ்ட்டோ விலெகாஸ், இவ்விவகாரம் தொடர்பாக வெனிசுலா வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைவில் உரிய பதிலை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com