வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம்: நளினி-முருகன் உடல் நிலை பரிசோதனை

வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் நளினி- முருகன் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
நளினி-முருகன்
நளினி-முருகன்
Published on

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய வேண்டும் என்று நளினி பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதில் தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கூட ஜெயில் அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. தங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று நளினி தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நளினி கடந்த 28-ந்தேதி உண்ணா விரதத்தை தொடங்கினார். தொடர்ந்து இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கருணை கொலை செய்யக்கோரி முருகனும் ஜெயிலில் 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

நளினி- முருகன் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு குறித்து காலை மற்றும் மாலை நேரங்களில் பரிசோதனை செய்யப் படுகிறது. அதிகாரிகள் கேட்டு கொண்டும் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டனர். தொடர்ந்து ஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com