

வேலூர்:
பஸ் கட்டணம் உயர்த்தபட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கலைகல்லூரியில் இன்று மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியை விட்டு வெளியேறினர். பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஓட்டேரி கூட்ரோட்டில் திரண்டனர், அங்குள்ள வேலூர்-திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
வேலூர் தாசில்தார் பாலாஜி, டி.எஸ்.பி. ஆரோக்கியம் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாணவர்கள் மறியல் செய்தனர்.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கபட்டனர். பாகாயம், தொரப்பாடி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பஸ் கட்டண உயர்வை அடியோடு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் கூறினர்.
இதனால் போராட்டம் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துரங்கம் அரசு கல்லூரியில் அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, ஆற்காடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஆரணி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தினமும் பஸ் மூலம் கல்லூரிக்கு வந்து செல்கிறோம். ஒரு நாளைக்கு ரூ.50 இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. புதிய கட்டண உயர்வால் தினமும் ரூ.100 முதல் ரூ.140 வரை பஸ்கட்டணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவ, மாணவிகள் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தினமும் ரூ.100க்கு மேல் செலவு செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.
எனவே அரசு பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் கடந்த வாரத்தில் 2 நாட்கள் வகுப்புகளை பறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து ரோட்டுக்கு வந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.