

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளாம் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஆராயி (வயது 46). மகள் தனம் (15), மகன் சமயன் (8) ஆகியோருடன் வெள்ளாம் புத்தூரில் வசித்து வந்தார். சமயன் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த மாதம் 21-ந்தேதி இரவு ஆராயி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம மனிதன் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்தான். ஆராயி, தனம், சமயன் ஆகியோரை உருட்டுக் கட்டையால் கொடூரமாக தாக்கினான்.
தலையில் பலத்த காயம் அடைந்த சமயன் அதே இடத்தில் இறந்து விட்டான். காயம் அடைந்து மயங்கி கிடந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் போலீசாருக்கு உடனடியாக கிடைக்கவில்லை.
இதற்கிடையே ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தனம், ஆராயி ஆகியோரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் தங்களை தாக்கியவர் பற்றிய அடையாளங்களை தனிப்படை போலீசாரிடம் தெவித்தனர்.
அந்த அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். திருக்கோவிலூர் பகுதியில் போலீசார் இரவு ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அவரிடம் துருவி... துருவி... விசாரணை நடத்தியபோது அந்த வாலிபர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை சேர்ந்த தில்லைநாதன் (36) என்பது தெரிய வந்தது. ஆராயி மற்றும் தனம், சிறுவன் சமயன் ஆகியோரை தாக்கியதாக அவன் கூறினான்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவனை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.