

சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்கும், பொருளாதார மந்தநிலைக்கும் பாரதிய ஜனதா அரசின் தவறுகள்தான் காரணம் என்றும், இது மனிதத்தவறு என்றும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருப்பது வியப்பளிக்கிறது.
இதற்கு அடிப்படைக் காரணம் சிதம்பரம் செய்த இமாலயத் தவறுகள் தான். இதை மூடி மறைப்பதற்காகவே அவர் இப்படி பேசியிருக்கிறாரோ என்கிற ஐயம் எழுகிறது.
பொருளாதார மந்தநிலைக்கு முழு முதற்காரணம், உள்நாட்டு உற்பத்திக் குறைவு. உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்காமல், அந்நிய நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்தியாவில் கொண்டு வந்து குவிக்க உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற தேசத்துரோக ஒப்பந்தத்தின் மூலம் வழி வகுத்தது சிதம்பரத்தின் காங்கிரஸ்.
அந்நியப் பொருள் குவிப்புக்கு அனைத்து வாசல்களையும் திறந்து விட்டதன் மூலம், உள்நாட்டு உற்பத்திகளை சரிவுப் பாதையில் தள்ளியதும் சிதம்பரத்தின் குழுதான்.
ப.சிதம்பரம் மிகச் சிறந்த அறிவாளி என்பதில் ஐயமேயில்லை. ஆனால், அந்த அறிவை அவர் எதற்காகப் பயன்படுத்தினார் என்பது விவரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். காந்திஜியும், வ.உ.சி.யும் காட்டிய சுதேசிப் பாதையில் இருந்து இந்தியா விலகக் காரணமாக இருந்த சிதம்பரம், தான் காட்டிய அழிவுப் பாதையையே பாரதிய ஜனதாவின் பொருளாதாரப் பாதையாக சுவீகரித்துக் கொண்டிருக்கிற பிரதமர் மோடி மீதும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீதும் பாய்வது உண்மையாகவே வியப்பளிக்கிறது.
சிதம்பரம் எடுத்த அந்நிய ஆதரவு நிலையைக் கைவிட்டுவிட்டு, காந்திஜியின் சுதேசிச் சார்பு நிலையைக் கடைப்பிடிப்பதன் மூலமே பொருளாதார மந்தநிலையில் இருந்து நாடு மீண்டு வர முடியும். இதை மோடி அரசு உணர வேண்டும்.
அந்நியப் பொருள் நடமாட்டத்துக்கும், ஆன்லைன் வணிகம் போன்ற அதர்ம அந்நிய வணிகங்களுக்கும் முடிவு கட்ட மோடி அரசு முன்வர வேண்டும்.
சிதம்பரத்தின் கொள்கைகளால் நாட்டைக்காப் பாற்ற முடியாது என்பதையும், காந்தியக் கொள்கைகளாலேயே நாட்டை மீட்க முடியும் என்பதையும் மோடி அரசு உணர்ந்தால்தான், பொருளாதார மந்தநிலை முடிவுக்கு வரும். இந்த யதார்த்தத்தை மத்திய, மாநில அரசுகளுக்குச் சுட்டிக் காட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடமைப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு வெள்ளையன் கூறி உள்ளார்.