

சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலா பால், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் சுரேஷ் கோபி எம்.பி.யும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கேரளாவில் ஆடம்பர கார்களுக்கு 20 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் சுமார் 13 சதவீதமே வரி வசூலிக்கப்படுவதால், கேரளாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் சொகுசு காரை போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் கேரள அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்த வரி ஏய்ப்பு நடவடிக்கையில் பிரபல நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபி, நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை அமலா பால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் இந்த விவகாரம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் பகத் பாசில் கடந்த மாதம் 25-ந் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நடிகை அமலா பால் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை அதிகாரிகள் முன் 15-ந் தேதி (நேற்று) ஆஜராகுமாறு அமலா பாலுக்கு உத்தரவிட்டதுடன், அதன்பின்னரே இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி அமலா பால் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அப்போது அவர், புதுச்சேரியில் தனக்கு வாடகை வீடு இருப்பதாகவும், அந்த முகவரியிலேயே தனது கார்களை பதிவு செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனது கார் பதிவு செய்யப்பட்டதில் எந்தவித வரி ஏய்ப்பிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே வரி ஏய்ப்பு விவகாரத்தில் நடிகர் சுரேஷ் கோபியும் கேரள ஐகோர்ட்டை அணுகி முன்ஜாமீன் கோரி இருந்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு, அவரை கைது செய்ய 3 வாரங்கள் தடை விதித்ததுடன், வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சுரேஷ் கோபிக்கும் உத்தரவிட்டு இருந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய கேரள குற்றப்பிரிவு அதிகாரிகள், புதுச்சேரியில் சுரேஷ் கோபியின் கார் பதிவு செய்யப்பட்ட முகவரி போலி என்றும், அங்கு நிரந்தர வீடு இருப்பதாக அவர் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும் கண்டுபிடித்தனர். அவர் ரூ.30 லட்சம் அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சுரேஷ் கோபி எம்.பி.யை குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். எனினும் ரூ.1 லட்சத்துக்கான பத்திரம் மற்றும் 2 தனிநபர்களின் உத்தரவாதத்தின் பேரில் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பிரபல நடிகரான சுரேஷ் கோபி கைதான சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.