

பாகூர்:
மடுகரை அருகே மொளப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43).
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.
சூரமங்கலம்- சிறுவந்தாடு ரோட்டில் ஜெகன் நகர் சந்திப்பில் வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு சுப்பிரமணி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து சுப்பிரமணியின் மகன் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.