திருச்சி அருகே வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி-பொதுமக்கள் மறியல்

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருச்சி அருகே வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி-பொதுமக்கள் மறியல்
Published on

மண்ணச்சநல்லூர்:

அரியலூர் அருகே உள்ள கீழப்பழுர் கிராமத்தை சேர்ந் தவர் மூர்த்தி (வயது 33), தொழிலாளி. இவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருச்சி சிறுகனூர் அருகே தச்சன்குறிச்சி பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். 

நேற்றிரவு அவர் சமத்துவபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது திருச்சி-லால்குடி சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் , மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இது குறித்த தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். 

இதனிடையே இன்று காலை தச்சன்குறிச்சி சமத்து வபுரம் அருகே உள்ள மது பானக்கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி -லால்குடி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது குறித்த தகவல் அறிந்ததும் லால்குடி தாசில்தார் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், தச்சன்குறிச்சி சமத்துவபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

ஏராளமானோர் அங்கு குவிவதால் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது. மேலும் மது அருந்தி விட்டு செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com