டீசல் விலை அதிகரிப்பால் காய்கறி விலை உயர்வு

டீசல் விலை அதிகரிப்பால் காய்கறி விலை உயர்வு

சமீபகாலமாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கறிகளின் விலையும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது.
Published on

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் இப்போது ரூ.69-ஐ எட்டியுள்ளது.

டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறி விலை உயரத்தொடங்கி உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோவை, நீலகிரி, மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் 2500 டன் காய்கறிகளும், 1500 டன் பழங்களும், 1000 டன் பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

டீசல் விலை உயர்ந்துள்ளதால் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை உயர்ந்து வருகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

சமீபகாலமாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கறிகளின் விலையும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. தற்போது டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால் காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களின் வாடகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வழக்கமாக கோடை காலத்தில் காய்கறிகளின் விலை அதிகரிக்கும். டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறிகள், பழங்கள், பூக்களின் விலை மேலும் 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது பெரிய வெங்காயம் கிலோ விலை ரூ.20-க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.25-க்கும், தக்காளி ரூ.20-க்கும், உருளைக்கிழங்கு ரூ.25-க்கும், கத்தரிக்காய் ரூ.20-க்கும், பீன்ஸ் ரூ.50-க் கும், அவரைக்காய் ரூ.35-க் கும், முள்ளங்கி ரூ.15-க்கும், பீட்ரூட் ரூ.12-க்கும், முருங்கைக்காய் ரூ.30-க்கும், வெண்டைக்காய் ரூ.20-க்கும், சேனைக்கிழங்கு ரூ.25-க்கும், காலிபிளவர் ரூ.20-க்கும், கேரட் ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com