வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாளை திறப்பு: சுற்றுலா பயணிகள் அனுமதி

4 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்த நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாளை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாளை திறப்பு: சுற்றுலா பயணிகள் அனுமதி
Published on

சென்னை:

4 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்த நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.

தமிழகத்திலேயே பெரிய சரணாலயம் என்ற சிறப்பை பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கும். கூழைக்கடா, நத்தை கொத்தி நாரை, பாம்புத்தாரா, பெலிக்கான் உள்பட மொத்தம் 26 வகையான வெளிநாட்டு பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகின்றன.

இந்த ஆண்டும் வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கியுள்ளன. இதுவரை 4 ஆயிரம் பறவைகள் வருகை தந்துள்ளன. டிசம்பர் மாதத்துக்குள் சுமார் 30 ஆயிரம் பறவைகள் வரை இங்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள ஏரியிலும் போதிய அளவு நீர் இருப்பதால், வழக்கம் போலவே இந்த ஆண்டும் சீசன் களைகட்டும் என தெரிகிறது.

தற்போது, குறைந்த அளவே பறவைகள் வந்திருந்தாலும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை நாளை (திங்கட்கிழமை) திறக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

நாளை காலை 6.30 மணி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகையை முன்னிட்டு, அங்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தொலைவில் உள்ள பறவைகளை அருகில் கண்டு ரசிக்க பைனாக்குலர் வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகள் வந்து செல்ல செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இடங்களில் இருந்து அரசு பஸ்களும் இயக்கப்பட இருக்கின்றன.

தற்போது, தொடங்கியுள்ள சீசன் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகும், 2 மாதங்கள் நீடிக்கும் என்று தெரிகிறது. அதுவரை சுற்றுலா பயணிகளும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த சரணாலயத்தில் பார்வையாளர்கள் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.5-ம், சிறியவர்களுக்கு ரூ.2-ம், வீடியோ கேமராவுக்கு ரூ.150-ம், செல்போன் கேமராவிற்கு ரூ.25-ம் வசூலிக்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com