வானூர் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி

வானூர் அருகே மது குடித்து விட்டு வந்தபோது மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி கார் டிரைவர் பலியானார்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஆவனம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிபாலன் (வயது 40). சென்னையில் கார் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவரது உறவினர் நாகப்பன் (38) என்பவரின் வீடு புதுவை மாநிலம் சேதராப்பட்டில் உள்ளது.

கொரோனா ஊரடங்குக்கு முன்பு மணிபாலன் சென்னையில் இருந்து நாகப்பன் வீட்டுக்கு வந்தார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஊர் திரும்ப முடியாமல் உறவினர் வீட்டிலேயே தங்கி விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை மணிபாலன், நாகப்பன் ஆகிய இருவரும் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு மது வாங்கி குடித்துவிட்டு, இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை மணிபாலன் ஓட்டினார்.

திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் ரங்கநாதபுரம் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மணிபாலனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்துபோனார். அவருடன் சென்ற நாகப்பன் லேசான காயத்துடன் தப்பினார்.

விபத்து பற்றி தகவல் அறிந்த வானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மணிபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான மணிபாலனுக்கு திருமணமாகி பாரதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com