திருமண விழாவில் தகராறு- 5 பேருக்கு வெட்டு: சென்னை பிரியாணி மாஸ்டர் கைது

வந்தவாசி அருகே சாப்பாட்டு விருந்தில் கூட்டு, பொறியல் வைக்காததால் திருமண விழாவில் ஏற்பட்ட தகராறில் 5 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக சென்னை பிரியாணி மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
திருமண விழாவில் தகராறு- 5 பேருக்கு வெட்டு: சென்னை பிரியாணி மாஸ்டர் கைது
Published on

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் வந்தவாசி டவுன் ஆரணி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது.

நேற்று இரவு வரவேற்பு விழா நடந்தது. அப்போது உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த மணப்பெண்னின் தந்தை ஆறுமுகத்தின் நண்பரான சீனிவாசன் (45) (பிரியாணி மாஸ்டர்) இவரது மனைவி பிரேமா (40) இருவரும் பைக்கில் வந்தனர்.

சீனிவாசன் தம்பதிக்கு உணவு பரிமாறப்பட்டது. மணமகனின் உறவினரான பச்சையப்பன் (35) என்பவர் பரிமாறியுள்ளார். கூட்டு, பொறியல் சீனிவாசனுக்கு வைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஏன் கூட்டு பொறியல் இல்லை என சீனிவாசன் கேட்டுள்ளார். நள்ளிரவு 1 மணி ஆவதால் கூட்டு பொறியல் இல்லை என கூறியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பச்சையப்பனை சீனிவாசன் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த பச்சையப்பன் உறவினர்கள் சீனிவாசனை தாக்கினர்.

இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பச்சையப்பன் அவரது உறவினர்கள் முனுசாமி (44), ஆகாஷ்(20), சேகர்(51), ராஜா ( 50) ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக முனுசாமி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சீனிவாசனுக்கும் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிச்சையில் இருந்தார்.

இன்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முயன்ற சீனிவாசனை கோட்டைமூலை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com