

புதுச்சேரி:
புதுவை முத்திரையர் பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் துளசிங்கம் (வயது 40). இவர் சொந்தமாக மினி வேன் வாங்கி ஓட்டி வந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையே மது குடிக்கும் பழக்கம் உள்ள துளசிங்கம் மது குடித்து விட்டு குடி போதையில் தற்கொலை செய்யப்போவதாக கூறி அடிக்கடி மனைவியை மிரட்டி வந்தார்.
அதுபோல் நேற்று மாலை மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த துளசிங்கத்திடம் குடும்ப செலவுக்கு பணம் தருமாறு அவரது மனைவி ரேவதி கேட்டார்.
அப்போது மனைவியை திட்டி விட்டு துளசிங்கம் தற்கொலை செய்ய போவதாக கூறி படுக்கை அறைக்கு சென்றார். எப்போதும் போல் கணவர் மிரட்டுகிறார் என இதனை ரேவதி கண்டு கொள்ளவில்லை.
சிறிது நேரம் கழித்து சந்தேகப்பட்டு ரேவதி படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு மின் விசிறியில் கணவர் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே துளசிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.