வாழைப்பழம் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கியதால் சட்டக்கல்லூரி மாணவி பலி

வால்பாறை அருகே வாழைப்பழம் சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி சட்டக்கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பஜாரை சேர்ந்தவர் செல்வரத்தினம். தொழிலாளி. இவருடைய மகள் தாரணி (வயது 19). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்தாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கோவை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் வால்பாறை வந்து வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்கள் முன்பு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதையடுத்து கடந்த 19-ந் முன்பு மதியம் தாரணிக்கு பசி எடுத்ததால் தனக்கு வாழை பழம் வேண்டும் என்று கேட்டு உள்ளார். பெற்றோரும் வாழைப்பழம் வாங்கி அவருக்கு கொடுத்தனர். அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாப்பிட்ட பழம் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தாரணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வால்பாறை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தாரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழைப்பழம் சாப்பிட்ட போது வலிப்பு வந்து பழம் தொண்டையில் சிக்கி சட்டக்கல்லூரி மாணவி திடீரென பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com