பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை

வடகாடு பகுதியில் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பச்சை மிளகாய்
பச்சை மிளகாய்
Published on

வடகாடு:

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளனர். கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் பச்சை மிளகாய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த வருடம் ஓரளவுக்கு விலை கிடைக்கும் என நினைத்து ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, பச்சை மிளகாய்க்கு உரிய விலை இல்லாமல் கிலோ ரூ.10 முதல் ரூ.12 என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கி மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு ஏற்றுமதி நடைபெறுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்த சமயத்தில் தான் பச்சை மிளகாய் சீசன் ஆகும். அப்போது பச்சை மிளகாய் கிலோ ரூ.3 முதல் ரூ.4 என்ற விலையிலேயே விற்பனை நடந்தது. இதனால் நொந்து போன விவசாயிகள் நிறைய பேர் பச்சை மிளகாயை பறிக்காமல் செடிகளில் விட்டுவிட்டனர். இதனால் பச்சை மிளகாய் பழுத்து செடிகளிலேயே நாசமாகி விட்டது. இதில் மிஞ்சியுள்ள ஒருசில விவசாயிகள் தான் மிளகாய் செடிகளை பராமரிப்பு செய்து, பச்சை மிளகாய்களை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையிலும் பச்சை மிளகாய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும், இந்த வருடம் பச்சை மிளகாய் பயிரிட்டிருந்த அனைத்து விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com