

ஊத்துக்கோட்டை:
பெரியபாளையம் அருகே உள்ள கொசவன்பேட்டை இருளர் காலனியில் கடந்த வாரம் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்களுக்கு அரசு சலுகைகளுடன் வீடுகள் கட்டிக் கொள்ள மாற்று இடம் தருவதாகவும், டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட உத்தரவிடுவதாகவும் கூறினார்.
இந்த நிலையில் மூடப்பட்ட மதுக்கடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருளர் இன மக்கள் கடையை மூட கோரியும் மாற்று இடம் ஒதுக்காததை கண்டித்தும் ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் இளைஞர் பாசறை மாநில துணைத்தலைவர்கள் சந்திரன், சுந்தரம், ஒன்றிய செயலாளர் அரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் தாசில்தார் கிருபா உஷாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், மீண்டும் திறக்கப்பட்ட கடையை உடனே மூட வேண்டும். வீடு கட்டிக் கொள்ளமாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து டாஸ்மாக் கடையை மூட தாசில்தார் உத்தரவிட்டார். மேலும் மாற்று இடம் ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.