கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் சேலம் எஸ்.பி. ஆபீசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாரகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இன்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை எடுத்து முருகன், அவரது மனைவி, மகன், மகள் உள்பட 6 பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதனை பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் உடனடியாக ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு மனைவி மகாலட்சுமி, மகன் கண்ணன், மகள் புவனா ஆகியோர் உள்னர். எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர் பிரகாஷ், மலர் ஆகிய 6 பேருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தோம்.

எனது 2 குழந்தைகளின் படிப்பு செலவிற்காக நான் வீட்டின் அருகே உள்ள ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்தேன். அதற்காக மாதம் 4 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.16 ஆயிரம் வட்டியாக செலுத்தியுள்ளேன்.

ஆனால், அவர்கள் தற்போது அசல் தொகை ரூ.20ஆயிரமும், வட்டி தொகை ரூ.10 ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.30 ஆயிரம் கேட்டு எங்களை மிரட்டியும் துன்புறுத்தியும் வீட்டைவிட்டு அவர்கள் விரட்டி விட்டனர்.இதனால் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வந்தோம்.

இதையடுத்து விரக்தி அடைந்த நாங்கள் வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து அனைவரும் தீக்குளிக்க இங்கு வந்தோம். அதற்குள், போலீசார் எங்களை தடுத்து நிறுத்தினர். தற்போது கந்துவட்டி கொடுமைக்காரர்களிடம் எங்களை காப்பாற்ற போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர்களை அன்னதானப்பட்டி போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலூர் ஏனாதிபதி பகுதியைச் சேர்ந்த ஜவுளி கடை அதிபர் முருகன் (35) கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மீண்டும் ஓமலூரை சேர்ந்தவர்கள் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com