

பீஜிங்:
சீசீனாவை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடலிம் ஒருபகுதி தெற்கு சீனா கடல் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் பிறநாடுகள் செலுத்திவரும் ஆதிக்கத்தை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த கடல் பகுதி முழுவதற்கும் சொந்தம் கொண்டாட முயன்றுவரும் சீனாவின் சர்வாதிகாரத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், நேற்றிரவு தெற்கு சீன கடல் பகுதியின் மீது அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான மூன்று அதிநவீன போர் விமானங்கள் பறந்து சென்றதை சீனாவின் உளவு ரேடார்கள் கண்டுபிடித்துள்ளன.
இதுதொடர்பாக, அமெரிக்க விமானப்படை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜப்பான் நாட்டு போர் விமானங்களின் பாதுகாப்புடன் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஒரு B1-B மற்றும் இரு F-15 ரக போர் விமானங்கள் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பசிபிக் கடலோரம் அமெரிக்க எல்லைப்பகுதியான குவாம் என்ற இடத்தில் இருக்கும் அமெரிக்க விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த போர் விமானங்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோழமை நாடுகளை பாதுகாக்கும் வகையிலும், பசிபிக் உள்பட சர்வதேச கடல் எல்லைப் பகுதிகளை அனைத்து தரப்பினருக்கும் சொந்தமாக்கும் வகையிலும் இரவு வேளைகளில் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட அமெரிக்கா-ஜப்பான் இடையே முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் அந்த செய்திக் குறிப்பு சுட்டிக் காட்டியுள்ளது.