தொடரும் இருநாடுகளின் மோதல்: அமெரிக்க குடிமக்கள் வடகொரியா செல்ல இன்று முதல் தடை

வடகொரியா நாட்டுக்கு சுற்றுலாவோ அல்லது வேறு பணிநிமித்தமாகவோ அமெரிக்கர்கள் யாரும் செல்லக்கூடாது என அந்நாட்டு அரசு பிறப்பித்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் இருநாடுகளின் மோதல்: அமெரிக்க குடிமக்கள் வடகொரியா செல்ல இன்று முதல் தடை
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், வாம்பியரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றதால், கடந்த ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்த வாம்பியர் சிறையிலிருந்து வீடு திரும்பிய ஒரே வாரத்தில் மரணமடைந்தார். வாம்பியர் கோமா நிலைக்கு சென்றதற்கு வடகொரிய அரசின் கொடூர சித்ரவதைகள் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், வடகொரியாவில் மிருகத்தனமான ஆட்சி நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் காரசாரமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வருகின்றது.  குறிப்பாக அமெரிக்காவை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளதால் அமெரிக்கா ஆத்திரமடைந்தது.

இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், அமெரிக்க குடிமக்கள் யாவரும் வடகொரியாவுக்கு இன்று முதல் சுற்றுலாவோ அல்லது வேறு பணி நிமித்தமாகவோ செல்லக்கூடாது என்று அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடகொரியாவுக்கு சென்றிருக்கும் சில அமெரிக்கர்கள் நேற்று தங்களது தாய்நாடு திரும்பினர். அமெரிக்கர்கள் பெரும்பாலும் வடகொரியாவுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com