ரக்கா நகரை முழுமையாக கைப்பற்றியதாக கூட்டுப்படைகள் அறிவிப்பு

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ரக்கா நகரை அமெரிக்க படைகளின் துணையுடன் முழுமையாக கைப்பற்றி விட்டதாக அமெரிக்க ஆதரவுபெற்ற கூட்டுப்படை இன்று தெரிவித்துள்ளது.
ரக்கா நகரை முழுமையாக கைப்பற்றியதாக கூட்டுப்படைகள் அறிவிப்பு
Published on

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற நடைபெற்று வரும் ஆயுதப் புரட்சி மற்றும் அங்குள்ள போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 2014-ம் ஆண்டு சிரியாவின் சில முக்கிய நகரங்களை ஆக்கிரமித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்குள்ள ரக்கா நகரை தங்களது தலைமைப்பீடமாக ஆக்கிகொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களை தீர்த்துகட்டும் பணியில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளின் விமானப் படைகள் அவ்வப்போது வான்வழி தாக்குதலில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில், ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அந்நகரின் அமெரிக்க போர் விமானங்களின் துணையுடன் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சிரியா ராணுவம் உச்சகட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பயந்து ஐ.எஸ். தீவிரவாதிகளில் பலர் ஓட்டம் பிடித்துள்ள நிலையில் நூற்றுக்கும் அதிகமான தீவிரவாதிகள் சமீபத்தில் சரண் அடைந்ததாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அங்கு இறுதியாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த தேசிய மருத்துவமனை மற்றும் விளையாட்டுதிடலும் அரசுப் படைகள் வசமானது. எனவே, ரக்கா நகரை அமெரிக்க படைகளின் துணையுடன் நேற்று முழுமையாக கைப்பற்றி விட்டதாக அமெரிக்க ஆதரவுபெற்ற சிரியா விடுதலை கூட்டுப்படை இன்று தெரிவித்துள்ளது. இந்த படையில் உள்ளூர் மக்கள் குர்திஷ் மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

வேறு எங்காவது தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா? என தேடும் பணியிலும், கண்ணி வெடிகளை நீக்கும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com