

லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நீதிமன்றம் தலையிட்டபிறகு, இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜாவதற்காக, பாதிக்கப்பட்ட பெண் இன்று தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது, கற்பழிப்பு குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை உயிரோடு எரித்துள்ளனர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்தப் பெண், லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சில மணி நேரங்களில் 5 குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதை உறுதி செய்யும்படி காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.