உன்னாவ் விபத்து- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

பாராளுமன்றத்தில் இன்று 2-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உன்னாவ் விவகாரத்தை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றம்
பாராளுமன்றம்
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கர் மீது இளம்பெண் பாலியல் புகார் கூறி இருந்தார். இது தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ. சிறையில் இருக்கிறார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அந்த பெண்ணை கொல்ல நடந்த சதி என்று எதிர்க்கட்சிகள் உ.பி. பா.ஜனதா அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டின.

உன்னாவ் விபத்து விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று எதிர்க்கட்சியினர் பிரச்சனையை கிளப்பினார்கள். இன்றும் 2-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் இன்று கூடியதும் காங்கிரஸ் அவை தலைவர் சுதிர்ரஞ்சன் சவுத்ரி மற்றும் 5 எம்.பி.க்கள் இது தொடர்பாக ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தனர்.

உன்னாவ் விபத்து திட்டமிட்ட சதி. இதை இந்திய மக்கள் அவமானமாக கருதுகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள்.

இதற்கு மத்திய மந்திரி ஜோஷி பதில் அளித்தார். உன்னாவ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அவர் எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அரசு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் உன்னாவ் விவகாரம் தொடர்பாக பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல உ.பி.யில் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டதற்கும் எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து கோ‌ஷமிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com